‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக அவ்வப்போது போராடி வருகின்றனர். கடந்த 26ம் தேதி மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருந்து மாலையில் விடுவித்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 10 நாட்களை கடந்தும் தொடர்கிறது. குறிப்பாக, சென்னையில் முக்கிய இடங்களில் ஆசிரியர்கள் போராடுவதும், அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவிப்பதும் தொடர்கிறது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் .
இதற்கிடையே, நேற்று முன்தினம் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிஜிபி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.







