வடசென்னை 2 படத்தில் சிம்புவா? இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம்!

வடசென்னை பின்ணனியில் சிம்புவை வைத்து படமெடுக்க எனக்கும் தனுஷுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை 2 படத்தில் நடிகர் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனுசுக்கும், வெற்றிமாறனுக்கும் இடையே பிரச்னை என்று தகவல் பரவியது. மேலும் தனுஷ், சிம்பு படத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சட்டரீதியாக பிரச்சனை வர உள்ளது போன்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக பரவியது.

இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசியவர், “கடந்த சில நாட்களாக என்னை பற்றி, வட சென்னை பட விவகாரம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வருகின்றன. ஒருசிலர் அதை கடுமையான மொழிகளில் சொல்லியிருக்கிறார்கள். அதனால், சில விளக்கம் அளிக்கிறேன். என்னுடைய அடுத்த படத்தை கலைப்புலி. எஸ்.தாணு தயாரிக்கிறார். சிம்பு நடிக்கிறார். அது வடசென்னை 2 படமல்ல. இதுதான் என் அடுத்த படம். வட சென்னை பின்னணியில் நடக்கிறது.

வட சென்னை படத்தின் சில கதாபாத்திரங்கள்ள், பின்னணி அதில் வரலாம். வட சென்னை 2 என்பது கண்டிப்பாக தனுஷை வைத்துதான் உருவாக்க முடியும். வட சென்னை அன்பு கேரக்டர் எழுச்சிதான். தனுஷ்தான் நடிக்க முடியும். படத்தின் ரைட்ஸ் அவரிடம்தான் இருக்கிறது. வாடிவாசல் படத்துக்கு பல வேலைகள் பாக்கி என்பதால் அது தள்ளிப்போகிறது. தாணு சார் தான் சிம்புவுடன் பேசுங்கள் என்றார். உடனே பேசினேன். பட வேலைகள் தொடங்கினேன்.

எனக்கும், தனுசுக்கும் இடையே வட சென்னை விஷயத்தில் எந்த கருத்து வேறுபாடும், சண்டையும் இல்லை. இது குறித்து அவரிடம் பேசியபோது கிரியேட்டராக நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை பண்ணுங்கள். வட சென்னை கதை விஷயத்தில், என் டீமுடன் பேசிவிட்டு, பணம் வாங்காமல் ஒப்புதல் தருகிறேன் என்றார். வட சென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் அவரிடம்தான் காப்பிரைட் உள்ளது. அவர் அந்த படத்தின் வேறு பாகம் எடுக்க பணம் கொடுங்கள் என்று கேட்பது சரியானது. நான் என் தரப்பு விஷயங்களை அவரிடம் பேசினேன். அவர் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.

மேலும், சிம்புவுடன் நீங்கள் இணைந்தால் அந்த படம் நன்றாக இருக்கும், வித்தியாசமாக இருக்கும். சிம்புவுக்கும் புது எக்ஸ்பிரியன்ஸ் ஆக இருக்கும் என உற்சாகம் கொடுத்தார். என்னுடைய பல பொருளாதார பிரச்னைகளில் தனுஷ் உதவி இருக்கிறார். அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சிம்புவிடம் பேசியபோது வட சென்னை குறித்து பல தகவல்கள் வருகிறது. உங்களுக்கும், தனுசுக்கும் எந்த பிரச்னையும் வராதபடி படம் பண்ணுங்க. நீங்க சொல்கிற கதையில் நான் நடிக்கிறேன், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். சிம்புவும், தனுஷும் நல்ல நட்பில் இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.