கத்தார் இயற்கை எரிவாயு ஆலை மீது ஈரான் தாக்குதல் ; இந்தியாவின் LPG இறக்குமதியை பாதிக்குமா…?

கத்தார் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஒன்றில் அந்நாட்டில் உள்ள ராஸ் லஃபான் எனப்படும் இயற்கை எரிவாயு (LNG) ஆலை சேதமடைந்துள்ளது.

ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் வெடித்துள்ளது. இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் கத்தார் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஒன்றில் அந்நாட்டில் உள்ள ராஸ் லஃபான் எனப்படும் இயற்கை எரிவாயு ஆலை சேதமடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஆலையான ராஸ் லஃபான் மீதான தாக்குதலின் விளைவாக, அந்த இடத்தில் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றாக கத்தார் திகழ்கிறது. முன்னதாக மார்ச் முதல் வாரத்தில், கத்தார் எரிவாயு வயல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் தொடர் தாக்குதல்கள் காரணமாக கத்தார் உற்பத்தியை இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால்  மத்திய கிழக்கின் முக்கியத் துறைமுகங்களில் 700-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் சிக்கிக்கொண்டுள்ளன. இதன் விளைவாக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ராஸ் லஃபான் ஆலை மீதான ஈரானின் தாக்குதல் நிலைமையை மேலும் மோசமடைய செய்யும் என்று அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவை பாதிக்குமா…?

இந்தியா தனது இயற்கை எரிவாயுத் தேவைகளில் 50 சதவீதத்தை சர்வதேச சந்தையிலிருந்தே கொள்முதல் செய்கிறது. அதிலும் 20 சதவீதம் இயற்கை எரிவாயுவானது கத்தாரிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரானின் தாக்குதல் எதிரொலியாக கத்தார் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தும் பட்சத்தில் இந்தியா தனது எரிவாயு தேவைகளுக்கு மாற்று வழிகளை தேட வேண்டியிருக்கும்.

இந்தியாவின் தினசரி இயற்கை எரிவாயு நுகர்வு 189 மில்லியன் மெட்ரிக் நிலையான கன மீட்டர்களாக (MMSCMD) உள்ளது. இதில், 97.5 MMSCMD அளவு எரிவாயு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் நிலையில் உணவு ஓட்டல்கள் மற்றும் ஹாஸ்டல்கள் தங்களுது உணவு பட்டியலில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. அதே நேரம் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லை எனவும் அச்சம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக ஏராளமான ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.