விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை : பத்திரிக்கையாளர் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. கூறிய முக்கிய தகவல்கள்……!

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 11ஆம் தேதி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மாநில அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள்,போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மாணவியின் உறவினர்கள், கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதி அருகே வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் கிராமம் முழுவதும் வீடு வீடாக சல்லடை போட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த சூழலில்  சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (30) என்ற வாலிபரை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றவாளியை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “விளாத்திகுளம் மாணவி கொலை தொடர்பாக 4 டிஎஸ்பி மற்றும் 6 ஆய்வாளர்கள் தலைமையில் 10 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். தனிப்படைகளில் மொத்தம் 150 காவலர்கள் இடம் பெற்று இருந்தனர். சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் , தென்மண்டல ஐஜி, நெல்லை சரக டிஐஜி , உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு பணியாற்றினர். இதில் காவல்துறையினர் இரவு பகல் பாராமல் பணியாற்றினர்.

பெண்ணை காணவில்லை என புகார் கொடுக்க வந்த போது நடவடிக்கை மேற்கொள்ளாத காவல் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சம்பவம் தொடர்பாக 98 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புள்ள 461 பழைய குற்றவாளிகளும் விசாரணை செய்யப்பட்டனர்

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் புகைப்படத்தை சட்டப்படி பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்படும். அதிலும் கிராமங்களில் 10 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.