தமிழக-கேரள எல்லைப்பகுதியின் வழியாக வரும் வாகனங்களை காட்டுயானைகள் அச்சுறுத்தி வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் தமிழக -கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அச்சன்கோவில் பகுதியில் இருந்து புனலூருக்கு செல்லும் சாலையின் இருபுறமும் வனப்பகுதிகளால் நிறைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் வழியாக வரும் வாகனங்களை காட்டு யானைகள் மறிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு பேரை யானை ஒன்று தாக்கியது. அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அச்சன்கோவிலில் இருந்து புனலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, அழிமுக்கு என்ற பகுதியில் ஒற்றை யானை ஒன்று சாலையை மறித்தபடி நின்று கொண்டிருந்துள்ளது. இதை கண்ட பேருந்து ஓட்டுனர் சாமர்த்தியமாக வாகனத்தை நிறுத்தினார். அந்த வாகனத்தை பார்த்த ஒற்றை யானை வாகனத்தை நோக்கி நடந்து வந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் வாகனத்தை பின்னால் எடுக்கும்படி டிரைவரிடம் கூச்சலிட்டனர். திடீரென இடது புறமுள்ள வனப்பகுதிக்குள் யானை சென்றதால் வாகனத்தில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அங்கிருந்து பேருந்து சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து அதே பகுதியில் கேரளா மாநில போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்தையும் காட்டு யானை மறித்துள்ளது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து யானை சென்றவுடன் அந்த பேருந்து புனலூர் நோக்கி சென்றது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் செல்ல கேரளா வனத்துறையினர் வாகன ஒட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.







