நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி நாதன் என்பவர் உயிரிழந்த நிலையில் வனத்துறையினரை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரின் உடலை வைத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஓவேலி செல்வபுரம் சப்பன்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாதன் (வயது 46). இவர் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த வருகிறார். இன்று வழக்கம் போல் தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தாக்கியதில் நாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த மாதம் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் மற்றொரு நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கிராமப் பகுதிக்குள் புகுந்து பொது மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகளை பிடிக்க வனத்துறையினருக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை கூறி வனத்துறையினரை கண்டித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் ஓவேலி பகுதியைச் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடலூரில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய மூன்று மாநில தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரத்திற்கும் மேலாக மூன்று மாநில வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தவிர்க்க வனப்பகுதியை சுற்றிலும் அகழிகள் அமைத்து தரவும், மனிதர்களை தாக்கும் யானைகளை பிடிக்க வேண்டும் எனவும், குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சோலார் வேலிகள் அமைக்க உத்தரவு வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.








