வடபழனி நிதி நிறுவன கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, வடபழனி மன்னார் முதலி தெருவில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஓசோன் கேபிட்டல் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் உள்பட பல்வேறு வணிக நிறுவனங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு கடன் வழங்கி வருகிறது.
இவ்வாறு கடன் கொடுத்து வாங்கும் பணத்தை நிதி நிறுவன அலுவலகத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த மர்ம நபர்கள் 7 பேர், முகமூடி அணிந்து அந்த நிதி நிறுவனத்தில் இருந்த ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு அங்கிருந்து ரூ.30 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கிய வடபழனி காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 7 பேரை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நிதி நிறுவன கொள்ளையர்களைத் தேடுவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை தேடி ஆந்திரா, திருச்சி, ஆகிய இடங்களுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
தப்பி ஒட முயன்ற கொள்ளையர்களில் ஒருவரான கல்லூரி மாணவன் சையது ரியாஸ் என்பவரை காவல் நிலையத்தில் நிறுவன ஊழியர்களே பிடித்துக் கொடுத்தனர். இந்தநிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட கிஷோர் என்பவரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மீதமுள்ள கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி, ஆந்திரா, பெங்களூர் போன்ற இடங்களிலும் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.







