காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை: ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

கோவை மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காரை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம், வறட்சி துவங்கியது முதல் அதிகரித்து…

கோவை மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காரை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம், வறட்சி துவங்கியது முதல் அதிகரித்து காணப்படுகிறது. காட்டுப்பகுதியில் இருந்து உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி அலையும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையை கடந்து ஒரு பகுதியில் இருந்து மற்ற வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு கோத்தகிரி மலை பாதையில் குஞ்சப்பனை அருகே
ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று காரை வழிமறித்தது.

இதனை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுநர், ஒருவித அச்சத்துடனே வாகனத்தை பின்னோக்கி ஓட்டினார். இருந்தும் காட்டு யானை வாகனத்தை விடாமல் துரத்தி வந்து வாகனத்தின் முன் பகுதியை தந்தத்தால் குத்தி, தும்பிக்கையால் தாக்கியது. உடனே சமயோசிதமாக செயல்பட்ட வாகன ஓட்டுநர் யானையின் பிடியில் சிக்காமல் காரை வேகமாக ஓட்டினார். இதனால் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

மேலும் அந்த வழியே வாகனத்தில் வந்தவர்கள், கோத்தகிரி நோக்கி முன்னோக்கிச் செல்லாமல் பாதி வழியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர் . பிறகு மலைப்பாதையில் சாலை ஓரத்தில் இருந்து செடி கொடிகளை தின்று முடித்துவிட்டு, ஆடி அசைந்தபடி காட்டுயானை, வனப்பகுதிக்குள் சென்ற பிறகே வாகன ஓட்டிகள் அந்த வழியே வாகனத்தை இயக்கி சென்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.