தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக பொய்யான தகவல் பரப்பிய விவகாரம் தொடர்பாக, உத்தரப்பிரதேச பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவுக்கு முன்ஜாமின் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் அவர்கள் அச்சமடைந்தனர். அந்த வீடியோக்கள் பொய்யானவை என அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முதலமைச்சர் உத்தவிட்டார்.
அவரது ட்வீட் சர்ச்சையானதையடுத்து அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர் என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மாநிலம் மற்றும் மொழி அடிப்படையில் மக்களிடையே பகையை ஏற்படுத்தியதாக பிரசாந்த் உம்ராவ் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமின் கோரி பாஜக செய்தித் தொடர்பாளர் மனு தாக்கல் செய்தார்.
பாஜகவின் பிரசாந்த் உம்ராவ் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன்று நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பேச்சுரிமை என்பதற்காக விஷம கருத்துகளைப் பதிவிடக் கூடாது. இந்த நபர் தன் கருத்துக்காக வருத்தம்கூட தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும், இவரது செயல் நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் 12 வாரம் இடைக்கால ஜாமின் எப்படி கொடுக்க முடியும். சென்னை சென்று உரிய நீதிமன்றத்தை அணுக உத்தரவை பிறப்பிக்கிறேன். எனவே, நீங்கள் மதுரைக்கோ அல்லது தூத்துக்குடிக்கு செல்லுங்கள். 1 வாரம் மட்டுமே தற்காலிக ஜாமின் வழங்க முடியும். உரிய நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோருவதற்கு ஏதுவாக இடைக்கால ஜாமின் வழங்கப்படும். சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடி நிவாரணம் வேண்டும் என்றால் பெறலாம் எனக் கூறி 10 நாட்களுக்கு தற்காலிக முன்ஜாமின் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-ம.பவித்ரா







