நீட் தேர்வு விலக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றதற்கான காரணத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு கட்டாயம் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நேற்று தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது. ஆனால், நீட் தேர்வு வழக்கையே தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் 2021ன் படி, சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : குரூப் 2 தமிழ் தகுதி தேர்விலிருந்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு தொடர்பாக உரிய சட்டவிதிகளை ஆராயாமல், நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு பதிலாக, முந்தைய சட்ட விதிகளை எதிர்த்தும், அவற்றை ரத்து செய்யுமாறும் கடந்த 2020ம் ஆண்டு அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த வழக்கை தொடர்ந்து நடத்தினால், நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் போராட்டத்திற்கும், மாணவர்களின் நலனுக்கும் பாதகமாக அமையும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நீட் தேர்வு தொடர்பான வழக்கு குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில், அதிமுக தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய வழக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கியும், மத்திய அரசின் பாதகமான சட்டவிதிகளை எதிர்த்தும், புதிய வழக்கு தொடர்ந்தும் உரிய மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதிமுக அரசின் தவறான வழக்கினை திரும்ப பெற்றதை, ஏதோ நீட் தேர்வு வழக்கையே திரும்ப பெற்றுவிட்டது போல சித்தரிப்பதும், திமுக அரசு தாக்கல் செய்துள்ள புதிய வழக்கினை மறைத்து, திசை திருப்பும் பிரச்சாரத்திலும் சிலர் ஈடுபட்டு வருவது கண்டத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் விலக்கு பெறுவது மட்டுமன்றி, பொருளாதார நிலையிலும் சமூகநீதி அடிப்படையிலும் பின்தங்கியுள்ள மாணவர்களின் எதிர்காலத்தினை பாதுகாத்திட, நீட் தேர்வை அகற்றிடவும், கொள்கைபிடிப்புடனான சட்டப் போராட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வென்றெடுக்கும் என்றும் தனது அறிக்கையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.







