அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தங்களது கொள்கைத் தலைவரின் பெயரிலான திட்டத்திற்கே நிதிஒதுக்க மறுக்கும் தவெக அரசு, தவெக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியின் பெயரில் உள்ள “சமூகநீதி” நிதர்சனத்தில் எங்கே போனது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாடுகளில் கல்வி பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்குப் போதிய நிதியை விடுவிக்காததால், அம்மாணவர்கள் பல மாதங்களாகக் கல்விக் கட்டணம் மற்றும் வீட்டு வாடகையைக்கூடச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை உரிய காலத்தில் சமர்ப்பித்த பின்னரும், அவற்றைச் சமூகநீதித் துறை சரிபார்ப்பதில் காட்டும் அலட்சியம் காரணமாக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்வி பயிலச் சென்ற தமிழக மாணவர்கள் தங்களது அன்றாடச் செலவுகளைக்கூடச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.
365 மாணவர்கள் தேர்வு; 65 பேருக்கு மட்டுமே நிதியுதவி!
அதுமட்டுமின்றி, தவெக அரசு அமைந்த பிறகு, 2026–2027 ஆம் கல்வியாண்டில் அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 365 பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைத் தேர்வு செய்துவிட்டு, அவர்களில் வெறும் 65 மாணவர்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கியிருப்பது, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீதான தவெக அரசின் பாரபட்ச மனப்பான்மை நிரூபணமாகியுள்ளதாக அம்மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர் பாரதிதாசன் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி விமர்சனம்!
ஏற்கனவே, மாணவர் பாரதிதாசனின் விவகாரத்தில், முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளை சட்டமன்றத்திலேயே பேசிய அத்துறை அமைச்சர், அம்மாணவருக்கு உரிய நேரத்தில் நிதியை விடுவிக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி, மாணவர் பாரதிதாசன் ஆதாரங்களோடு காணொளி வெளியிட்ட பின்பும், இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கணத்த குரல் எழுப்பிய பின்னரே நிதியை விடுவித்த தவெக அரசு, தற்போது அதே திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் நிதியை விடுவிக்க மறுப்பதன் மூலம், அரசின் உத்தரவாதத்தை நம்பி தங்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்த பெற்றோர்கள், தற்போது கூடுதல் கடன் பெற்று பணம் அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசே, இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிதியை முறையாக ஒதுக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவது, அம்மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் அடியோடு சிதைக்கும் செயலாகும்.
“சமூகநீதியைக் காக்க வந்த ரட்சகர்” எனக் காட்டிக்கொள்ளும் விஜய்!
தனது அமைச்சரைவையில் பட்டியலினத்தை சார்ந்த 7 பேருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக பெருமிதம் கொண்டு “சமூக நீதியைக் காக்க வந்த ரட்சகர்” போல தன்னை காட்டிகொள்ளும் விஜய், அச்சமூகத்தை சார்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய இத்திட்டத்தை புறக்கணிக்க முயல்வது ஏன்?எனவே, அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டிய பொறுப்பையும் கடமையையும் அலட்சியத்துடன் தட்டிக்கழிக்காமல் அம்மாணவர்களுக்குச் சேர வேண்டிய நிலுவை நிதி உள்ளிட்ட அனைத்து நிதியுதவிகளையும் எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக விடுவித்திட வேண்டும் என சமூகநீதித் துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




