எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர்.
இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் – வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
வழக்கம் போல பில் வரவில்லை – Mail வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




