333 ரன்கள் குவித்த நியூசிலாந்து; முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்!

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி மௌண்ட் முன்கானுயில் இன்று நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 333 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான டிம் சீஃபர்ட் 58 ரன்களும், வில் யங் 125 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் ஆகிப் நபி, குர்னூர் ப்ரார், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரில் களமிறங்கிய விராட் கோலியும் டக் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரிலேயே இந்திய அணி 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.