தமிழகம் முழுவதும் நூலகங்களில் போலி பதிப்பகங்கள் மூலம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் நூலக அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில், மதுரை மாவட்டத்தில் உள்ள 133 நூலகங்களுக்கு விநியோகம் செய்வதற்காக வந்த பார்சல்களில் போலி பதிப்பக புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2,000 புத்தகங்கள் கண்டறியப்பட்டன!
சென்னையில் உள்ள நூலகத்துறை இயக்குநர் அலுவலகம் மூலம் கடந்த 2025 – 26 ஆம் நிதியாண்டில் கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு விநியோகம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட பீனிக்ஸ், அகல்விளக்கு பதிப்பக புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக பீனிக்ஸ் பதிப்பகத்தில் 531 புத்தகங்களும், அகல்விளக்கு பதிப்பகத்தில் 1552 புத்தகங்கள் என மொத்தம் 2000 புத்தங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட மைய நூலகம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் புத்தகங்கள் அகற்றம்!
மேலும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மேற்கொண்ட ஆய்வில் பீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து 356 தலைப்புகளில் சுமார் 800 புத்தகங்கள் அகற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





