வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கவில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியானதாக அறிவிக்கப்பட்ட வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை.  முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு…

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியானதாக அறிவிக்கப்பட்ட வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை. 

முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.

பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

ராகுல்காந்தியின் இந்த தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வாயில் கருப்பு துணிக் கட்டியும், ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு மே 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவித்திருந்தார். கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் போதே வயநாடு மக்களவை தொகுதி இடைத் தேர்தலுக்கான தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று இன்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை.

வயநாடு தேர்தல் தொடர்பாக எந்த தகவலையும்ஏன் கூறவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் , ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் 6 மாத காலம் வரை அவகாசம் உள்ளது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த கீழ் நீதிமன்றம், அந்த தண்டனையை மேல்முறையீட்டுக்காக நிறுத்தி வைத்துள்ளது. ஆகையால் நாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம் என ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.