ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல், சுவாதி மாலிவால், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் ஷைனி ஆகிய 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய எம்பி ராகவ் சத்தா மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ; ஆம் ஆத்மி கட்சியை வளர்த்தெடுத்த, பெரும் எதிர்பார்ப்புகளுடன் அதில் இணைந்த ஒவ்வொருவரும், அக்கட்சியிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். நேர்மையானவர்களுக்கு இனி ஆம் ஆத்மி கட்சியில் இடமில்லை. மேலும், ஆம் ஆத்மி கட்சியானது ஒரு தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
பாபா சாகேப் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு உரிமையை வழங்குகிறது. தங்கள் கட்சி ஊழல் மிகுந்தவர்களின் கைகளில் சிக்கிக்கொண்டதாகவோ அல்லது தவறான பாதையில் செல்வதாகவோ அவர்கள் உணர்ந்தால், அக்கட்சியிலிருந்து வெளியேறும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு.
இந்தச் சூழலில் மொத்தம் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ஒருங்கிணைந்து வெளியேறுகின்றனர். ஏனெனில், ஆம் ஆத்மி கட்சியானது ஊழல் மற்றும் சமரசத்திற்கு உட்பட்டவர்களின் கைகளில் சிக்கிக்கொண்டது. நாங்கள் அச்சத்தினால் வெளியேறவில்லை; மாறாக, ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகளால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாகவே வெளியேறினோம். இவ்வாறு அவர் கூறினார்.







