கர்நாடக சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 209 வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்களாக 918 பேர் களத்தில் மோதுகின்றனர்.
வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், பல்வேறு செய்து நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. அதில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றே பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டாலும், எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற முடிவுகள் வெளிவரவில்லை.
இதனால் கர்நாடகாவில் அரியணை ஏறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவே உற்றுநோக்கும் இந்த தேர்தலில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று, ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூறி வருகிறது.
இதையும் படியுங்கள் : ’தல’ தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால்!!
இந்நிலையில், கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 36 மையங்களில் வாக்குகளானது எண்ணப்படுகிறது. கர்நாடக தேர்தல் முடிவுகள் நாளை காலை 8 மணி முதல் உங்கள் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.







