அகதிகள் முகாமில் பிறந்து அமெரிக்காவில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த 24 வயது இளம்பெண்ணின் எழுச்சியூட்டும் பயணம், தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
சோமாலியவை சேர்ந்தவர் ஹம்டியா அஹ்மத். 24 வயது இளம்பெண்ணான இவர் ஆப்பிரிக்காவின் கென்யாவில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தவர் மற்றும் தனது வாழ்க்கையின் முதல் 7 ஆண்டுகளை அங்கேயே கழித்தவரும் கூட. பின்னர் அங்கிருந்து பயணித்து பல இன்னல்களையும், துன்பங்களையும் கடந்து தற்போது அமெரிக்காவில் முதுகலை பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து ட்விட்டரில் பகிர்ந்து கொண்டதோடு, அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அவர் அதில் ”24 ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டுப் போரில் இருந்து தப்பியபோது அவரது தாயார் தன்னைப் பெற்றெடுத்ததாகவும், அவளுடைய பெற்றோர் பணம் இல்லாமல் அமெரிக்காவிற்குச் சென்றதாகவும், அப்போது அவர்கள் என் உடன்பிறப்புகளுக்காகவும், எனக்காகவும் பல தியாகம் செய்திருக்கிறார்கள் ” எனவும் மனம் உருக பதிவிட்டிருந்தார்.
மேலும், தனது பள்ளிக் கல்விக்கு பணம் செலுத்த உதவியவர்களுக்கு நன்றி கூறிய அவர், நீங்கள் மட்டும் இல்லை என்றால் என்னால் படித்திருக்க முடியாது என கூறியிருந்தார். பிறகு தன் தாய் குறித்து அவர் பேசும்போது “ஒரு வலிமையான பெண்ணின் வரையறை” தன் தாய் என்றும் அவர் தனது வாழ்க்கை கதையைப் ஒரு முழு புத்தகமாக எழுத முடியும் என்றும் கூறினார்.
அதேபோல், அவரது தந்தை ஒரு டெலிவரி மேனாக வேலை செய்தார் எனவும், அகதியாக இருக்கும்போது அவரது பணி சுமை எப்படி இருந்தது என்பதை விவரித்திருந்தஅவர்,
தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஆதரவளித்தவர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபை, வெளியுறவுத் துறை மற்றும் தனது குடும்பத்தை அமெரிக்காவுக்குச் செல்ல அனுமதித்த அனைவருக்கும், தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஹம்தியா அகமது மேலும் கூறுகையில், தான் தொடர்ந்து சட்டபடிப்பை படிக்க விரும்புவதாகவும், மேலும் அந்த படிப்பிற்காக நிதி திரட்ட உதவியை நாடுவதாகவும் கூறிய அவர், அகதிகள் முகாமில் வாழ்ந்தபோது தான் கண்ட அநீதி இனி நடக்காமல் இருக்க, சட்டம் பயின்று மக்களுக்காக வாதிட தன்னைத் தூண்டியது என்று அவர் பகிர்ந்து கொண்டார். தற்போது இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளதோடு, முதுகலைப் பட்டம் பெற்ற ஹம்டியா அஹ்மதிற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
https://twitter.com/hamdia_ahmed/status/1655008379973009408?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









