“80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. தமிழ்நாடு எங்கே போகிறது?” – இபிஎஸ் கண்டனம்

கடலூரில் 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் மூதாட்டியை சவுக்கு தோப்பிற்கு இழுத்துச்சென்று வாயில் மண்ணை கொட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் முதாட்டி காது, மூக்கில் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்துக்கொண்டு தப்பியோடினர். அவ்வழியாக சென்றவர்கள் ரத்த காயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

பின்னர் மூதாட்டி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவரை இன்று போலீசார் சுட்டுப்பிடித்தனர். இந்த நிலையில், 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள திமுக ஆட்சியில், 80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 இளைஞர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றாலும், முதலமைச்சர் இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.

6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, “அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய” அவலச் சூழலை தமிழ்நாட்டில் ஏற்படுத்திய இந்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள்”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.