ஃபெடரல் விளைவு என்றால் என்ன?

உலக நாடுகளின் பண மதிப்பு குறைவு மற்றும் பங்குச் சந்தைகளில் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடனுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான காரணம் என்று குறிப்பிடப்படும் ஃபெடரல்…

உலக நாடுகளின் பண மதிப்பு குறைவு மற்றும் பங்குச் சந்தைகளில் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடனுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான காரணம் என்று குறிப்பிடப்படும் ஃபெடரல் விளைவு என்றால் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்.

அமெரிக்காவின் மத்திய வங்கியாக செயல்படுகிறது ஃபெடரல் ரிசர்வ். சர்வதேச வர்த்தகத்தில் நிதிசார் பரிமாற்றங்கள் சிக்கலின்றி சீராக நடைபெறுவதற்காக, பெரும்பாலும் அமெரிக்க டாலர் பண மதிப்பில் நடைபெறுகின்றன.

கொரோனாவுக்கு பின், சரிவடைந்த பொருளாதாரத்தை சீரமைக்க, தொடர்ச்சியாக நான்காவது முறையாக கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது ஃபெடரல் ரிசர்வ். இதனால் உலக நாடுகளின் பண மதிப்பு சரிந்தும், பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத சரிவும் ஏற்பட்டது. இதையே ஃபெடரல் விளைவு என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். சென்ற வாரம் ஃபெடரல் ரிசர்வ், கடனுக்கான வட்டி விகிதத்தை 75 புள்ளிகள் உயர்த்தியது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியும், உலக நாடுகளின் மத்திய வங்கிகளும், அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதனால் பணவீக்கம், விலைவாசி குறையவில்லை. அமெரிக்க டாலருக்கு இணையான மூன்றாம் நாடுகளின் பண மதிப்பும் சரிவை சந்தித்து வருகின்றன.

அமெரிக்க டாலரில் நிதி பரிமாற்றம் மேற்கொள்ளும் ஏற்றுமதி நிறுவனங்களும், டாலரில் சம்பளம் பெறும் பணியாளர்கள் மட்டும் பயன் பெற முடியும். மாறாக இறக்குமதிக்கு தேவைப்படும் அந்நிய செலாவணி டாலர் கையிருப்பு வேகமாக கரைந்து வருவதால் வர்த்தக பற்றாக்குறை அளவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை நடைபெறும், நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ரெப்போ விகிதம் எனப்படும், கடனுக்கான வட்டி விகிதத்தை, மேலும் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஜனவரி மாதத்திலிருந்து, பணவீக்கமானது, ரிசர்வ் வங்கி கூற்றுப்படி கட்டுக்குள் வரும் என கூறிய நிலையில், 6 சதவீதத்தை, தாண்டி 7 சதவீதத்துக்கும் அதிகமாகவே தொடர்கிறது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மே மாதம் 40 புள்ளிகள், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா 50 புள்ளிகள் என ஐந்து மாதங்களில், மூன்று முறை என இதுவரை 140 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில், மீண்டும் 50 புள்ளிகள் அதிகரிக்கும்போது, ரெப்போ விகிதம் 5.40 சதவீதத்திலிருந்து, 5.90 சதவீதமாக உயரும். அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வை, இந்திய ரிசர்வ் வங்கியும் பின்பற்றுகிறது என்பது புரியும்.

மேற்குலக நாடுகளைப் போல் இந்தியாவிலும் அதிகரித்து வரும் பணவீக்கம், உணவு உட்பட இதர பொருட்கள் விலை அதிகரிப்பு, பொருளாதாரத்தின் சீரற்ற நிலை ஆகியவற்றால் ரெப்போ விகிதங்களை உயர்த்த வேண்டி உள்ளது. இந்த கசப்பான நடவடிக்கை பொருளாதாரத்தை மீட்சிக்கு கொண்டு வர பயணிக்கும் ரிசர்வ் வங்கியின் இலக்கை எட்ட உதவும் என கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் மறைமுகமாக பொருளாதார கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். உலகப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது என பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்ச்சியான ரெப்போ விகித உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது ஒரு புறம் எளிய நடுத்தர மக்கள் என்றால், மறுபுறம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை காணப்படுகிறது. இவர்களின் காயத்திற்கு என்ன மருந்தை தடவப் போகிறது அரசு என்று நுகர்வோர் அமைப்பினரும், தொழில் துறையினரும் காத்திருக்கின்றனர்.

-ரா.தங்கபாண்டியன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.