பாஜகவை ஆட்சியில் அமர விடாமல் தோற்கடிக்க அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டியலின, பழங்குடியினர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவர், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சந்தித்து பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதலமைச்சருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசினேன். இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்படும். இந்திய அரசமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க, மாநிலங்கள் அளவில் பாஜகவை ஆட்சியில் அமரவிடாமல் தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படத் தயாராக உள்ள அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம் என சீதாராம் யெச்சூரி கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








