ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்
செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார்.
அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குயவர் தெருவில் இருந்து சென்னை
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் பேரணியை தகைசால் தமிழர்
விருது பெற்ற மூத்த தலைவர் நல்லகண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநிலச்
செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து
வந்திருந்த 4000- க்கும் மேற்பட்டவர்கள் சிவப்பு நிற சட்டை அணிந்து ஆளுநரை
திரும்பப் பெற வேண்டும் என்ற பதாகைகளுடன் கையில் சிபிஐ கொடியை ஏந்தி கொண்டு
கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பேசிய சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் , தமிழக அரசின் வரிப்பணத்திலிருந்து அனைத்து வசதிகளும் பெற்றுக்கொண்டு தமிழ்நாடு
அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர்
அடாவடித்தனம் செய்து செய்து வருவகிறார். ஆன்லைன் ரம்மி மூலம் இதுவரை 60க்கும்
மேற்பட்டோர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில்
நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அரசு விளக்கமளித்த பிறகும்
ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. முதலமைச்சர், சட்டத்துறை அமைச்சர் என பல அரசியல் கட்சிகள் ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், ஆன்லைன் சூதாட்ட கும்பலோடு ஆளுநர் மாளிகைக்கு வரவைத்து
விருந்து வைத்து உரையாடுவது என்னவிதமான கள்ள உறவு என்று கேள்வி எழுப்பியதோடு
நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் தமிழ்நாடு
மக்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது நியாயமா என கேள்வி எழுப்பினார். கார்ல் மார்க்ஸால் இந்தியா கெட்டுப்போனது என பேசுகிறார். இந்தியா இந்து நாடு. திருக்குறள்
இந்துக்களின் நூல். சனாதனம் தான் இந்திய அரசியலமைப்பு சட்டம். ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று காட்டமாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேரணியை நல்லக்கண்ணு கொடி அசைத்து தொடங்கி வைத்த பின்
கிழக்கு ஜோன்ஸ் ரோடு வழியாக தொடங்கிய பேரணி பஜார் சாலையை கடந்து கலைஞர்
கருணாநிதி பொன்விழா வளைவு அருகே வரும்பொழுது போலீசார் தடுப்புகளை அமைத்து பேரணியாக வந்தவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரால் பேருந்தில் ஏற்றப்படும் பொழுது அவர்களை
பேருந்தில் ஏற்றி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், இந்தப் போராட்டம் என்பது தனிப்பட்ட நபரான ஆளுநருக்கு எங்களுக்கும் ஆன பிரச்சனை
அல்ல. அரசியலமைப்பு சட்டத்தை மதித்து ஆளுநர் நடந்திட வேண்டும் அதேபோன்று
மதச்சார்பின்மை கொள்கையை அவர் பின்பற்ற வேண்டும். அதற்கு எதிராக பேசக்கூடாது.
என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை ஆளுநர் மதிக்க வேண்டும்.
சட்ட மசோதாக்களை அனுமதிக்காமல் இருப்பது தமிழக மக்களை அவமதிப்பதாகும் என்று கூறினார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி கையொப்பமிட்டு குடியரசுத் தலைவருக்கு
அனுப்பியுள்ளோம். குடியரசு தலைவர் இடமிருந்து எந்த பதிலும் இல்லாத ஒரு சூழலில்
நேரடி போராட்டத்தை இன்றைக்கு நடத்த வேண்டி இருப்பதால் போராட்டம் நடந்து
அனைவரும் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள். போராட்டத்திற்கு நல்ல
முடிவுகள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அப்படி ஏற்படவில்லை என்றால் போராட்டம் தொடரும் எனவும் கூறினார்.
மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும். அல்லது ஆளுநர் நிலைமையை புரிந்து
கொண்டு தான் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்ட முறையாக அவர் ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும். இரண்டு வழிகள் உள்ளதாகவும் அவரை திரும்ப பெறவில்லை என்றால் இதைக் காட்டிலும் போராட்டம் பன்மடங்கு அதிகரிக்கும் எச்சரிக்கை விடுத்தார்.