புதுச்சேரியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட முன்னாள் காவலர் உட்பட 2 பேரை
போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒதியம்பட்டு மெயின் ரோடு சந்திக்குப்பம் சந்திப்பில் இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் விற்பனைகாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர்கள் கோரிமேடு காவலர் குடியிருப்பை சேர்ந்த அரவிந்த் (எ) அரவிந்தராஜ் (27), வில்லியனூர் வீரவாஞ்சி நகரை சேர்ந்த பாலா (எ) பாலகுமரன் (26) என்பது தெரிய வந்தது.
இவர்கள் சென்னையில் சேட்டா என்ற நபரிடமிருந்து கஞ்சா வாங்கி வந்து இங்குள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருவதும், இதில் அரவிந்தராஜ் என்பவர் ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றிய போது மற்றொரு காவலரை தாக்கிய வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்டதால், வேலையில்லாமல் கஞ்சா விற்று வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1கிலோ 100 கிராம்
கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி
சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்களுக்கு விற்பனைக்கு கஞ்சா கொடுத்த சென்னையை சேர்ந்த சேட்டா
என்பவரின் செல்போன் எண்ணை கொண்டு அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.







