பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வருகை தமிழ்நாட்டில் பாஜக முன்னிலைக்கு கொண்டு செல்லுமா? அதன் வியூகம் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்னரை ஆண்டு இருக்கிறது. ஆனாலும் தேசிய, மாநிலக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டன, குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஹாட்ரிக் வெற்றியைப் பெற வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் முன்னதாக களத்தில் இறங்கி விட்டது. இந்த முறை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக இடங்களில் பெற வேண்டும் என்று ஆபரேசன் சவுத் என்று தலைவர்கள் வியூகம் வகுத்து வருகின்றனர். இதன்படிதான், தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்களின் தமிழ்நாட்டு வருகை அடிக்கடி நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த அடிப்படையில்தான் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தற்போது தமிழ்நாடு வந்தார். இந்த பயணத்தின் போது, மாநில, மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை அளித்துள்ளார். குறிப்பாக, தனித்தோ, கூட்டணியோ 25 இடங்களுக்கு குறையாமல் வென்றாக வேண்டும். அதற்கான வேலைகளைச் செய்யுங்க. கட்சி அதற்கு துணை நிற்கும் என்று நம்பிக்கையூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தைரியத்தில்தான் பாஜகவிற்கு 25 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெல்லும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை மீண்டும் சொல்லியுள்ளார்.
குறிப்பாக, கடந்த சட்டபேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு அதிக இடங்களைக் கொடுத்த கொங்கு மண்டலத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் நட்டாவின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாகத்தான் ஜே.பி.நட்டா, அன்னூர் ஒன்றியத்தில் உள்ள கிளைத் தலைவர் மூர்த்தி என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து, வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை, பொதுக்ட்டத்தில் பேசியது உள்ளிட்டவை எல்லாம் என்கிறார்கள். கூட்டத்தில் பேசிய அவர், எங்களுக்கு நாடுதான் முதலில், அதற்கு பின்னர்தான் கட்சி. ஆனால், திமுகவிற்கு முதலில் குடும்பம். அதற்கு பிறகுதான் கட்சி, கடைசியாகத்தான் நாடு. திமுகவில் மட்டுமல்ல காங்கிரஸிலும் இதேநிலைதான் என்று என்று கடுமையாக விமர்சனம் செய்தார். ஆட்சியமைக்க தேவையான இடங்களைப் பெற்றாலும் தென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர பாஜகவிற்கு சொல்லிக் கொள்ளும்படி ஆதரவு இல்லை. இதை மாற்ற வேண்டும் என்றுதான் முயற்சிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணி அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்று முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகையால்,கூட்டணியைப் பலப்படுத்தும் வகையில, ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் ஒருபக்கம் முயற்சிக்கப்படுகிறது. இதற்கு அதிமுக தரப்பிலுல் நல்ல சிக்னல் கிடைத்துள்ளதாம். குறிப்பாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேசியதை சொல்கிறார்கள். இதையடுத்துதான், கூட்டணி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குறித்து கட்சியினரின் சொந்த கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு பாஜக ஐ.டி விங்கும் அறிவுறுத்தியுள்ளது என்கிறார்கள்.
மேலும், ஜே.பி நட்டாவின் தற்போதைய வருகை மக்களவைத் தேர்தல் பணிக்கான தொடக்கமாகவும் அமைந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தை கோவையில் தொடங்கியுள்ளார். குறிப்பாக கோவை, நீலகரி தொகுதியில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்றும் பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார். அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சு நடக்கவில்லை. தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படவில்லை என்றாலும், கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால், இந்த 2 தொகுதிகளும் தங்களுக்குத்தான் என்று முன்பதிவு செய்வது போல் சொல்லாமல் சொல்லியுள்ளார் என்கிறார்கள். இது மட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை தேர்வு செய்து தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். அதை தற்போது வேகப்படுத்தியுள்ளனர் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
பாஜகவின் முயற்சிகள் பலன் கொடுக்குமா? தமிழ்நாட்டு மக்களின் முடிவு என்னவாக இருக்கும்? காத்திருப்போம்….