மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி குறித்து கட்சி முடிவெடுக்கும் – பிருந்தா காரத்

மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி குறித்து கட்சியில் ஆலோசித்து முடிவு செய்வோம் என சிபிஐஎம் தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள்…

மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி குறித்து கட்சியில் ஆலோசித்து முடிவு செய்வோம் என சிபிஐஎம் தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, பெங்களூருவில் 2வது ஆலோசனை கூட்டம் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை பங்கேற்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் தேசிய அளவில் பொது வேட்பாளரை நிறுத்துவது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பாஜக. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயரிட்டனர்.

இந்த நிலையில், சிபிஐஎம் தலைவர் பிருந்தா காரத் இன்று நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது;

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தாக்குதலில் இருந்து நாட்டையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன என்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மையான கூட்டாளிகள் என்றால் அது சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியோர்தான். இவர்களை தங்கள் கையில் வைத்துக்கொண்டு அனைவரையும் மிரட்டி பார்க்கின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளுடன் சமூக இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.

“ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு அரசியல் சூழ்நிலைகள் உள்ளன. ED மற்றும் சிபிஐக்கு பயந்து என்.டி.ஏ கூட்டணியில் இருந்து முக்கியமான தோழர்கள் பலர் விலகிவிட்டனர். எனவே சமூகக் கட்சிகள் மாநில அளவில் ஒன்றுபட வேண்டும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-யிடமிருந்து இந்தியாவையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவது எதிர்க்கட்சிகளின் பொதுவான குறிக்கோள் என்பதை அவர்கள் நம்ப வேண்டும். மேலும் மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி குறித்து கட்சியில் ஆலோசித்து முடிவு செய்வோம். இவ்வாறு பிருந்தா காரத் கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.