சீனாவில் உள்ள வூஹான் நுண்ணுயிரியல் ஆய்வகம் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நிலைகள் குறித்த ஆவணங்களை தர மறுத்ததால், ஆராய்ச்சி பணிகளுக்காக கொடுக்கப்பட்டு வந்த நிதியுதவியை தடை செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க சுகாதாரத் துறை வூஹான் நுண்ணுயிரியல் ஆய்வகத்தை சோதனைக்கு உட்படுத்தியது. அப்போது அங்கிருக்கும் வசதிகள் அமெரிக்க வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணக்கமாக இல்லை என்ற அறிக்கையை அரசிடம் சமர்பித்ததோடு, கோவிட் -19 கசிவு தொடர்பான ஆவணங்களை சீனா வழங்கவில்லை என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றும் குற்றம் சட்டியிருந்தது.
பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில், தற்போது வூஹான் ஆய்வு மையத்துக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் தங்களது அமெரிக்க சுகாதாரத் துறை அமைச்சகம் கொடுத்துள்ள தரவுகளின் படி, இதுவரை தங்களிடம் இருந்து நிதியுதவியைப் பெறும் ஆய்வகங்களின் பட்டியலிலிருந்து வூஹான் ஆய்வகம் நிரந்தரமாக நீக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதனால் அமெரிக்காவிலிருந்து மேற்கொண்டு எந்த நிதியுதவியும் இந்த ஆய்வகத்துக்குக் கிடைக்காது என்பது உறுதி செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனா தங்கள் நாட்டில் COVID-19 காரணமாக இறந்தவர்களின் தரவை நீக்கியதாக வெளிவந்த தகவலின் அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தேசிய சுகாதார மையத்திடமிருந்து நிதியுதவி வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், அமெரிக்கவின் இந்த புதிய அறிவிப்பு வூஹான் நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









