ஆளுநருக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்… இது தமிழ்நாடு..!! – முரசொலி விமர்சனம்

இது தமிழ்நாடு என்றும், இதனை ஆளுவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக முரசொலி நாளேடு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய…

இது தமிழ்நாடு என்றும், இதனை ஆளுவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக முரசொலி நாளேடு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு பல்வேறு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து முரசொலி நாளேட்டில் கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. அதில், வெயிலின் தாக்கத்தால் தமிழ்நாட்டு மக்களெல்லாம் வாடிக் கொண்டிருக்கும்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி குளுமையான ஊட்டிக்கு சென்று தங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் 156 ஏக்கர் பரப்பளவிலும், ஊட்டியில் 86.72 ஏக்கர் பரப்பளவிலும் ராஜ்பவன் விரிந்து கிடப்பதாக குறிப்பிட்டுள்ள முரசொலி, இந்தியாவின் ஆளுநர்கள் மிகவும் யோகக்காரர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கவலைப்படவில்லை என்று தெரிவித்த முரசொலி, குளுமையான ஊட்டியில் துணை வேந்தர்களை அழைத்து ஆளுநர் அரசியல் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசப் போவதாக அறிவித்து, துணைவேந்தர்களுக்கு சம்பந்தமில்லாத தொழில் முதலீடுகளை பற்றி ஆளுநர் பேசியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு – கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!!

”நாம் கேட்பதாலோ, வெளிநாடு சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது” என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நினைத்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை இடித்துரைத்துள்ளதாக விமர்சித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.