மத்தியப்பிரதேசத்தில் சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. அப்போது, யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது.
மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக சிபிஐ மற்றும் ரயில்வே உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் சரக்கு ரயிலின் இருபெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. நேற்று இரவு ஜபல்பூரில் இருந்து எரிவாயு ஏற்றிச் சென்ற ரயில் சரக்கை இறக்கி வைப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதன் இரு பெட்டிகள் தடம் புரண்டன. எனினும் மெயின் லைனில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற ரயில்வே துறையினர் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.







