முக்கியச் செய்திகள் தமிழகம்

’நாங்கள் கொள்கைக்கு வாரிசுகள், கோட்பாட்டுக்கு வாரிசுகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாங்கள் கோட்பாட்டுக்கும், கொள்கைக்கும் வாரிசுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ் உணர்வாளர்கள் பலரும், எழுதியும் பேசியும் இந்தி திணிப்பின் ஆபத்தை மக்களுக்கு விளக்கினர். இதையெல்லாம் உள்வாங்கி இருப்பது ஓர் உயிர். அது போகப்போவது ஒரு முறை. ஒரு நல்ல காரியத்திற்காக, நாட்டுக்காக போராடி வாழ்ந்து, தமிழுக்காக உயிர்நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்.

கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, பீளமேடு தண்டபாணி, கீரனூர் முத்து சண்முகம் போன்றவர்களின் தியாகங்களை போற்றுவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் நாள், மொழிப்போர் தியாகிகள் நாளாக நாம் கடைபிடிக்கிறோம்.

முதல் தியாகி சின்னசாமி மொழிக்காக உயிரைக் கொடுத்தவர். 1964 ஆம் ஆண்டு உயிரிழந்தார். மொழிப்போர் தியாகி சிவலிங்கம் பெயரில் ஒரு தெரு இருக்கிறது. மொழி போர் தியாகி அரங்கநாயகம் பெயரில் சென்னையில் பாலம் இருக்கிறது. மொழிப்போர் தியாகிகள் நினைவாக நூலகம், பாலம், சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம்
திராவிட இயக்கத்தின் வரலாறு. உயிரைத் தந்து தமிழ் தாயை காத்தவர்களை, நாங்கள் நன்றி உணர்வோடு நினைத்துப் பார்க்கிறோம். அவர்களது தியாகத்திற்கு தலை வணங்குகிறோம்.

யாரால் ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்தவர் அல்ல பேரறிஞர் அண்ணா. மொழிப்போர் தியாகிகளின், தியாகம் வீண் போகவில்லை. பள்ளி முதல் உயர்கல்வி வரை தமிழில் படிக்கும் நிலை இங்கு உள்ளது. உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இருமொழிக் கொள்கைதான் காரணம். பாஜக அரசு இந்தி மொழி திணிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரு உணவு, ஒரே பண்பாடு, ஒரே வரிசையில் மொழியை அழிக்க பார்க்கிறார்கள். இந்தியாவை இந்தி மொழியாக்க முயல்கிறது. தமிழ் மொழி, உணர்வாய் உயிராய் இருக்கிறது. தமிழ் மொழியை, தமிழை காக்கின்ற போராட்டமாக இது தொடரும். இந்த கூட்டத்திலும் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தி மொழி திணிப்புக்கு எதிரான நமது போராட்டம் எப்போதும் தொடரும்.

இந்தியை, ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, அதிகாரம் செலுத்தும் மொழியாக உருவாக்க பாஜக அரசு முயற்சித்து கொண்டிருக்கிறது. ஆதிக்கம் செலுத்தும் மொழியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தை அகற்ற பார்க்கிறார்கள். இந்திக்கு அந்த இடத்தை தாரை வார்க்கிறார்கள். இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக் கூடாது. இருமொழி கொள்கைதான் தமிழ்நாட்டிற்கு. அனைத்து அலுவலக செயல்பாடுகளும் தமிழிலேயே இருக்க திருத்தம் செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும். இதுவே எங்களின் கொள்கை.

643 கோடி ரூபாய் சமஸ்கிருதத்திற்கும், 23 கோடி ரூபாய் தமிழுக்கும் நிதி ஒதுக்கீடு செய்த இவர்கள்தான் தமிழ் சங்கமும் நடத்துகிறார்கள். எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் இல்லை. ஆதிக்க சக்தியோடு, மொழியை திணிக்க நினைத்தால் ஏற்க மாட்டோம். தமிழ்நாடு இதுவரை பல மொழிப்போர் கலங்கங்களை சந்தித்திருக்கிறது. ஒவ்வொரு தமிழரும் நினைவு கூற வேண்டிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினம். மொழிப்போரில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை மதிக்க வேண்டும்.

கடந்த 22 மாதங்களாக, தமிழ் மொழியை காக்கும் வகையில், திராவிட மாடல் ஆட்சி  நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக செய்ய வேண்டியதை, ஒன்றரை ஆண்டுகளுக்குள் நாம் செய்துள்ளோம். ஊழல் செய்து தமிழ்நாட்டை அகல பாதாளத்துக்கு கொண்டு சென்றதுதான் அதிமுகவின் 10 ஆண்டு சாதனை. ஈரோட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் அதிமுகவுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். பச்சை துண்டு போட்டுக் கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகத்தை செய்தது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளின் நிர்வாகமும் தரைதட்டி நின்றது. ஆம். நாங்கள் வாரிசுகள் தான். நாங்கள் கோட்பாட்டுக்கு வாரிசுகள். கொள்கைக்கு வாரிசுகள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு?

Web Editor

ஆறுமுகசாமி ஆணையம், உண்மை கண்டறியும் ஆணையம்; தமிழ்நாடு அரசு

EZHILARASAN D

நீதிபதியின் தீர்ப்பால் பின்னடைவு இல்லை-கே.பி.முனுசாமி

Web Editor