உலகில் சமநிலையை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் ஜி20 தலைமை உதவும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 74வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நாட்டுமக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு ஊக்கமான செயல்பாடுகளால் உலகில் வேகமாக வளரும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாக குடியரசு தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
உலகில் பொருளாதார நிலையற்றதன்மை நிலவும் நேரத்திலும் இந்தியா உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்திருப்பதாகவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மகிழ்ச்சி தெரிவித்தார்.
விவசாயிகள், தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என அனைவரின் ஒருங்கிணைந்த பலத்தால் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்ட குடியரசு தலைவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தாம் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார். நாடு அடைந்த வெற்றிகளை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் நாள்தான் குடியரசு தினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல் சாசன நிர்ணய சபையின் தலைவராக இருந்து அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கு இந்த நேரத்தில் தேசம் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குடியரசு தலைவர் குறிப்பிட்டார்.
உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையையும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85சதவீதத்தையும் பெற்றுள்ள நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது குறித்து பெருமிதம் தெரிவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி20 அமைப்பு உலகில் சமநிலையை ஏற்படுத்தும் முயற்சி மேலோங்கும் என்றும் கூறினார்.
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பாலின சமத்துவம் ஆகியவை வெறும் முழக்கங்களாக இல்லாமல், சமீப காலங்களில் இந்த விஷயங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மகிழ்ச்சி தெரிவித்தார்.
விண்வெளித்துறையில் இந்தியா நிகழ்த்திய சாதனைகள் குறித்து பெருமிதத்தோடு கூறிய குடியரசு தலைவர், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.