சமநிலையை இழந்து பேசுகிறார் மம்தா பானர்ஜி – மாணிக்கம் தாகூர் எம்பி!

பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்று காங்கிரசுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத் தேர்தல் பணிகளில் அதிகாரிகள் மாற்றப்பட்ட அதிருப்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடரபாக அவர் வெளியிட்டுள்ளார் எக்ஸ் தள பதிவில், “மம்தா பானர்ஜியின் சமீபத்திய கருத்து மிகவும் பொறுப்பற்றதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். பாஜகவிற்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய இந்த நேரத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மட்டுமே பலவீனப்படுத்தும்.

எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைப்பது மம்தா தனது சமநிலையை இழந்து பேசுவதைப் போல தோன்றுகிறது. 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் அல்ல, திரிணாமூல் காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததும், 2004 தேர்தலில் ஆர்எஸ்எஸ் – பாஜக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதும் மறக்கக் கூடாது. உண்மைகள் இல்லாமல் கூட்டணி கூட்டாளிகளை குறிவைத்து, அமைப்புகளின் மீது சந்தேகம் எழுப்புவது தலைமைத் தன்மையல்ல அது கவனச் சிதறலாகும்.

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-பாஜக கொள்கைக்கு எதிராக நின்று போராடி வருகிறார். அவர்மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன; அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது அரசு வீடும் காலி செய்யப்பட்டது ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்த்து நிற்பதற்கு அவர் செலுத்திய விலை இது.

பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு யாரிடமும் பாடம் தேவையில்லை. இது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுக்கான நேரமல்ல. இது ஒற்றுமை, பொறுப்பு, மற்றும் நோக்கத்தில் தெளிவு கொண்டிருக்க வேண்டிய நேரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.