“எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து கையை காட்டுவது அரசியல் கிடையாது” – பிரேமலதா விஜயகாந்த்!

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளையும் பெற்று எதிர்க்கட்சியே இல்லை என்று சூழல் உருவாகும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர், “தேர்தல் நேரத்தில் பெண்களின் சக்தி, எவ்வளவு பெரிய சக்தி என்பது நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே 21ஆம் தேதி தேர்தல் பணி முடியும். சேலத்தில் இப்படி ஒரு பெண்களின் மாநாடு திரட்டி பெண்களுக்கு மிகப்பெரிய முன்னுரிமை கொடுத்தவர் முதலமைச்சர். பெண்கள் தான் இந்த நாட்டின் கண்கள் என்று கேப்டன் சொல்வார். ஒரு பெண்ணுக்கு எவ்வளவு தூரம் மரியாதை, சம உரிமை தருகிறார் என்பதை இன்று நான் அவருடன் நடந்து வந்த பொழுது உணர்ந்தேன்.

சமூக நீதி, சம தர்மம், சம நீதியை தமிழ்நாடு முழுவதும் பார்க்க முடிகிறது. தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளையும் பெற்று எதிர்க்கட்சியே இல்லை என்று சூழல் உருவாகும். நான் என்னுடைய தொகுதிக்கு மட்டும் செல்லவில்லை. யாரெல்லாம் என்னை அழைத்து உரிமையோடு பிரச்சாரம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்களோ அங்கெல்லாம் நான் செல்கிறேன்.

தவெக தலைவர் விஜய் குறித்து பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, இன்று ஒரு தம்பி வந்துள்ளார். அவர் முதலில் நிரூபிக்கட்டும். சினிமாவில் இருந்து வந்தவர் இங்கு உலக நாயகனே இருக்கிறார். அது போல தான் தம்பியும், முதல் அடி நீங்கள் வைக்கும் பொழுது எதிராளிகளை நீங்கள் குறைத்து மதிப்பிடவே கூடாது.

கேப்டன் எப்படி தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்தாரோ உங்களுடைய வாக்கு வங்கியை நிரூபியுங்கள். அதன் பிறகு நீங்கள் இரண்டு பேருக்கு போட்டி தான் என்ற டயலாக்கை பேசுங்கள். அரசியல் வேறு சினிமா வேறு, அது தொழில் இது சேவை. மக்களை நாம் அன்றாடம் நேசிக்க வேண்டும். களத்தில் இறங்கி மக்களுக்காக போராட வேண்டும். எங்கேயோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு கையை காட்டுவது அரசியல் கிடையாது. களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக இருந்த தலைவர்கள் தான் அரசியலில் வேண்டுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரே ஒரு குற்றச்சாட்டு தான், பெண்கள் கூட்டத்தில் சொல்கிறேன்; எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை,போதை கலாச்சாரம் தான். இதுதவிர வேறு எதை சொல்ல முடியும், வேறு எதையும் இந்த ஆட்சியின் மீதுசொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.