சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில், சிங்கி தராய் பகுதியில் உள்ள வேதாந்தா அனல் மின் நிலையத்தில் ஏப்ரல் 14ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பாய்லர் வெடித்துள்ளது. அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்தவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஓடியதால், நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுமார் 30 முதல் 40 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சத்தீஸ்கா் மாநில அரசு சாா்பில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.35 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.15 லட்சம், அவா்கள் உடல்நிலை குணமடையும் வரை மாத சம்பளம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.







