“காவல் நிலையத்தை ‘ரீல்ஸ்’ களமாக்கிய தவெக அமைச்சர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காவல்துறையின் கண்ணியத்தைச் சிதைத்து, காவல் நிலையத்தை ‘ரீல்ஸ்’ களமாக்கிய தவெக அமைச்சர் காந்திராஜுக்குக் கடும் கண்டனம் என நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் நிலையம் என்பது பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நிர்வாக மையமே தவிர, ஆளுங்கட்சியினர் விளம்பரம் தேடும் படப்பிடிப்புத் தளம் அல்ல. அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்திற்குள் நள்ளிரவில் ‘ஆய்வு’ என்ற பெயரில் புகுந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ், பணியில் இருந்த சீருடைப் பணியாளர்களையும், குறிப்பாக ஒரு பெண் காவலரையும் மிரட்டும் தொனியில் பேசி, அதனைத் திரைப்படப் பாடலுடன் ‘ரீல்ஸ்’ வீடியோவாக வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கூட்டுறவுத் துறையை நிர்வகிக்க வேண்டிய அமைச்சர், நள்ளிரவில் காவல் நிலையத்திற்குள் சென்று அதிகாரத் தோரணையில் பேசியிருப்பது அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகமாகும்.
தவெக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தங்களது கடமைகளை விட ‘ரீல்ஸ்’ வெளியிடுவதில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்; மொத்தத்தில், இந்த ஆட்சியே ரீல்ஸில்தான் நடைபெறுகிறது. காவல்துறையின் மாண்பையும் பெண் காவலரின் சுயமரியாதையையும் சினிமாப் பாடல் பின்னணியில் கேலிக்கூத்தாக்குவதுதான் தவெக அரசு கூறும் நிர்வாகத் திறமையா?

முதலமைச்சர் விஜய் அவர்களே, மக்களுக்கான ஆட்சியை நடத்தப் போகிறீர்களா, இல்லை ‘ரீல்ஸ்’ அரசியலைத் தொடரப் போகிறீர்களா? நள்ளிரவில் காவல்துறையின் மாண்பைக் குலைத்து, பெண் காவலரின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் நடந்துகொண்ட அமைச்சர் வ. காந்திராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? உடனடியாக அந்த வீடியோவை நீக்கவும், அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் உத்தரவிடுவதோடு, இனி அமைச்சர்கள் அதிகார வரம்பை மீறாமல் செயல்படுவதைத் தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.