தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு கோரி விரிவான ஆவணத்தை வழங்கினார்.
இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ சென்னை நுழைவுச் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஆய்வுகள் மற்றும் முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்துக் கலந்துரையாடினோம்.
திருச்சி – கரூர் – கோயம்புத்தூர் 230 கி.மீ. பசுமை வழி நெடுஞ்சாலைக்கு விரைந்து ஒப்புதல், சென்னை – கோயம்புத்தூர் – தூத்துக்குடி தொழில் வழித்தட விரைவுச் சாலை மற்றும் புதுச்சேரி – கிருஷ்ணகிரி (திண்டிவனம் – திருவண்ணாமலை) நான்குவழிப் பணிகள் மற்றும் வாகனச் சுரங்கப்பாதை உள்ளிட்ட சாலைப் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துதல்;
அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) நிறுவுதல் திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டோம்.
நிலையான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து என்கிற குறிக்கோளை முன்வைத்து கலந்துரையாடினோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




