This News is Fact Checked by NewsMeter
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ரோடு ஷோவில் ஈடுபட்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத ஒருவரால் அவர் தாக்கப்படும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது பழையது மற்றும் தேர்தலுக்கும் வீடியோவிற்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.
பாஜக ஊழலை வெளிப்படுத்துவேன். ஜெயில் கைதி கெஜ்ரிவால், போட்டான்பார் ஒரு போடு நம்ம ஆளு என்ற கேப்ஷனுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் கன்னத்தில் தாக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை சரிபார்ப்பு
இந்த வீடியோவை ஆய்வு செய்த NewsMeter, இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்க்கப்பட்டது. அப்போது, 2019-ம் ஆண்டு மே 4-ம் தேதி ‘Hindustan Times’ செய்தி நிறுவனம் தனது யூடியூப் சேனலில் இந்த வைரலாகும் காணொலியை பதிவிட்டு இருந்தது. அதில், “டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மோதி நகர் பகுதியில் ரோடு ஷோ நடத்திய போது இச்சம்பவம் நடைபெற்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2019-ம் ஆண்டு மே 5-ம் தேதி இது தொடர்பாக விரிவான செய்தியை ‘ABP ஊடகம்’ வெளியிட்டிருந்தது. அதில், “2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டிருந்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அதன் ஒரு பகுதியாக மே 4, 2019 அன்று டெல்லி மோதி நகர் பகுதியில் ரோடு ஷோ நடத்திய அரவிந்த் தெஜ்ரிவாலை 33 வயதான சுரேஷ் என்பவர் கெஜ்ரிவால் பயணித்த வாகனத்தின் மீது ஏறி அவரை கன்னத்தில் தாக்கினார். இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அதே போல் 2019-ம் ஆண்டு மே 10-ம் தேதி ‘Deccan Chronicle’ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி “முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏன் தாக்கினேன் என்று தெரியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன் என்று அவரைத் தாக்கிய சுரேஷ் கூறினார்” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.
முடிவு
உண்மை சரிபார்ப்பின் முடிவாக அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் தாக்குவது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும் இந்த சம்பவத்திற்கும் தற்போது நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நிரூபணம் ஆகியுள்ளது.
Note: This story was originally published by ‘NewsMeter‘ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective….








