அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

நெற்களம் இல்லை, கொள்முதல் நிலையம் இல்லை, அறுவடை செய்த பயிர்களை சாலையில் போட்டு விட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள்.அவர்களின் கோரிக்கை என்ன? விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதானமாக நெல் மட்டும் தென்னை விவசாயம்…

நெற்களம் இல்லை, கொள்முதல் நிலையம் இல்லை, அறுவடை செய்த பயிர்களை சாலையில் போட்டு விட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள்.அவர்களின் கோரிக்கை என்ன?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதானமாக நெல் மட்டும் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளான கூமாப்பட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7200 ஏக்கர் பரப்பளவில் தற்போது சம்பா நெல் சாகுபடி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை ஓரளவுக்கு நிரம்பிய நிலையில், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு சுற்றுவட்டார கண்மாய்கள் நிரம்பியது.

இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு புறம் மகிழ்ச்சி அடைந்தாலும் மழையின் காரணமாக சில பகுதிகள் சேதமும் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி ஏராளமான நெற்கதிர்கள் குலைநோய் தாக்கத்தால் சேதமடைந்தது. இந்த நிலையில் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் நெல் அறுவடைக்குத் தயாராகி வருகின்றனர். சில பகுதிகளில் நெல் அறுவடை பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லாமல் மிகுந்த சிரமம் அடைந்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கும் விவசாயிகள் வத்திராயிருப்பு பகுதியில் நிரந்தரமாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்முதல் நிலையம் ஒரு புறம் இல்லாத சூழ்நிலையில் மறுபுறம் நெற்களம் இல்லாததால் அறுவடை செய்த நெல்லை சாலையில் போட்டு அதை எடை போடும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் விவசாயிகள் ஓரளவிற்கு செலவு செய்த பணத்தை எடுப்பதற்காக வத்திராயிருப்பு பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.