தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதனையொட்டி நேற்று விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை செய்தார்.
இந்த சூழலில் தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது தேர்தல்நிலை கண்காணிப்பு குழு அதிகாரி அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த புகாரில் கொளத்தூரில் நடந்த பரப்புரை செய்த போது 5 ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பொதுமக்களை திரட்டியதாகவும், பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் பாதையை மறைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையில் நடந்தவை மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தமிழ் நாடு பொறுப்பு டி.ஜி.பி ஆகியோரிடம், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







