புதுச்சேரியில் 6 திரையரங்குகளில் மட்டும் இரவு 1.30 மணி சிறப்பு காட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன. இதில் துணிவு திரைப்படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு, அதற்கான டிக்கெட் முன்பதிவும் நடைபெற்றது. இதையடுத்து புதுச்சேரியில் 1.30 மணி நள்ளிரவு சிறப்பு காட்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய இருவருடைய படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், நள்ளிரவு காட்சிக்கு அனுமதி அளித்தால், திரையரங்குகள் இருக்கக்கூடிய பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என்பதாலும், அண்டை மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானவர்கள் புதுச்சேரிக்கு வருவார்கள் என்பதாலும், 1.30 மணி சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் விளக்கமளித்தன. காலை 5 மணி முதல் இரண்டு திரைப்படங்களையும் திரையிட புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் அனுமதி அளித்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியருடன் திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்து, டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் சுழற்சி முறையில் (முதலில் துணிவு திரைப்படம், அடுத்து வாரிசு திரைப்படம்) அதிகாலை காட்சி திரையிட கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் அதிகாலை காட்சிக்கு விண்ணப்பத்து அனுமதி பெற்ற 6 திரையரங்குகளுக்கு மட்டும், அதிகாலை 1:30 மணி சிறப்புக் காட்சி திரையிட அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். மேலும் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.