பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வரசக்தி விநாயகர் மற்றும் பாலகணபதி கோயிலில், நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரம்பலூர், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் புதிதாக
கட்டப்பட்டுள்ள வரசக்தி விநாயகர் மற்றும் பாலகணபதிக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் காரை கிராமத்தை சுற்றியுள்ள கொளக்காநத்தம், தெரணி, புதுக்குறிச்சி, நாரணமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடமுழுக்கு நிகழ்வில் பங்கேற்றனர்.
தொடர்ந்து இரவு அதே கிராமத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மனுக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றதில்ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் மற்றும் மாவிளக்குகளை கொண்டுவந்து சந்தனக்காப்பினால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் மற்றும் சுப்ரமணியன் சுவாமிகளை பக்தியுடன் வழிபட்டனர்.
அதனைதொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குதிரை மற்றும் காளை வாகனத்தில் எழுந்தருளிய மகாமாரியம்மன் உடன் மூஞ்சுரு வாகனத்தில் விநாயகரும் மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியன் ஆகிய சுவாமிகள் கிராம முக்கிய வீதிகளில் வானவேடிக்கையுடன் திருவீதியுலா வந்தனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் வருகை தந்த பொதுமக்களால் காரை கிராமம் இரவும், பகலும் விழாக்கோலமாக காட்சியளித்தது.
ரூபி.காமராஜ்









