திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றியதாக தயாரிப்பாளரை கடத்திய கும்பலால் பரபரப்பு…. காவல்துறையின் அதிரடி சோதனையில் மீட்கப்பட்டார் தயாரிப்பாளர்….. நடந்தது எங்கே? பார்க்கலாம் இந்த தொகுப்பில் விரிவாக…..
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத். இவர் 10 ஆண்டுகளாக தமிழ், கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்ததுடன், திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு தான் தயாரித்த திரைப்படத்திற்கு ஷூட்டிங் லொகேஷன் பார்க்க ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றார். ஷூட்டிங் நடத்தும் இடங்களுக்குச் சென்றபோது சத்தியமங்கலம் மற்றும் கொத்தமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த தயா என்கிற கரிகாலன், கார்த்திகேயன் மற்றும் சிவசக்தி ஆகியோர் அறிமுகமாகினர்.
படப்பிடிப்புக்கான இடங்களை தேர்ந்தெடுக்க 3 பேரும் பலவகையிலும் உதவியதாக கூறப்படுகிறது. மேலும் தங்களையும் விநியோகஸ்தர் தொழிலில் சேர்த்துக் கொள்ளுமாறும், சினிமாவில் நடிக்க தங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத்திடம் வேண்டுகோள் வைத்தனர். கிருஷ்ண பிரசாத்தும் இவர்களை விநியோகஸ்தர் தொழிலில் பங்குதாரர்களாக்குவதாக சம்மதம் தெரிவித்தார். இதன்பிறகு கிருஷ்ணபிரசாத் ஷூட்டிங் தொடர்பாக சத்தியமங்கலம் பகுதிக்கு வரும் பொழுதெல்லாம் தங்கும் செலவும் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் 3 பேருமே கவனித்துக்கொண்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கிருஷ்ணபிரசாத்திற்காக பல லட்சம் செலவழித்ததாக கூறப்படுகிறது.
ஒன்றரை ஆண்டாகியும் தங்களுக்கு தொழிலில் எந்த வாய்ப்பும் வழங்காததால், தாங்கள் செலவழித்த தொகையினை கிருஷ்ணபிரசாத்திடமிருந்து வாங்க கடத்திச் செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கிருஷ்ணகிரியில் பட தயாரிப்பாளர் முருகன் என்பவரது அலுவலகத்திற்கு கிருஷ்ண பிராசாத் வந்திருப்பதை அறிந்த தயா உள்ளிட்ட 3 பேரும் நைசாக பேசி, ஒரு ஆம்னி வேனில் கடத்தி அழைத்துச் சென்றனர். கிருஷ்ண பிரசாத்தை தாக்கி, தாங்கள் செலவழித்த இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்கா விட்டால், கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத்தை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக தயாரிப்பாளர் முருகன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் சேலம் தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகள் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தினர். சத்தியமங்கலம் காவல் துறையினர் சத்தியமங்கலம் வடக்குப் பேட்டை பகுதியில் வேகமாக வந்த மாருதி வேனை மடக்கியபோது வேனில் இருந்த 3 பேரும் தப்பி ஓட முயற்சித்தனர். 3 பேரையும் பிடித்து காவல் துறை வாகனத்தில் ஏற்றி சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். காரில் கடத்தப்பட்ட தயாரிப்பாளர் கிருஷ்ணபிரசாத்தையும் போலீசார் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பணத்திற்காக 3 பேரும் தன்னை கடத்தி அடித்து உதைத்தாக மீட்கப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ணபிரசாத் பதற்றத்தோடு தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத்தை மீட்டது குறித்து கிருஷ்ணகிரி காவல் துறையினருக்கு சத்தியமங்கலம் காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட கரிகாலன், கார்த்திகேயன் மற்றும் சிவசக்தி உள்ளிட்ட மூன்று பேரையும் கிருஷ்ணகிரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பணத்திற்காக தயாரிப்பாளர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.











