தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மணப்பாறை வெஸ்ட் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட ரூ.5.50 லட்சம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 7 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் உணவு பொருட்களை மருத்துவமனை நிர்வாகத்திற்கு அமைச்சர் வழங்கினார். பின் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் தேவைகள் குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் மருத்துவக் குழுவினரிடம் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள், மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அவை இன்னும் வரவில்லை. 18 முதல் 44 வயதுடையோர்களுக்கான ஊசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாடு சரிசெய்யப்படும். மணப்பாறையில் இதுவரை 309 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அதில் 176 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இங்கு இறந்துள்ள 46 நபர்களில் 9 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். தற்போது 87 பேர் சிகிச்சையில் உள்ளனர். படுக்கைகள் நிரம்பி வழிந்தது, நின்றுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 1300 படுக்கைகள் சிகிச்சைக்காக உள்ள நிலையில் 1000 தொற்றாளர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். 350 சாதாரண படுக்கைகளும், 40 ஆக்சிஜன் படுக்கைகளும், 40 வென்டிலேட்டர் படுக்கைகளும் தற்போது காலியாகவே உள்ளது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் தேவையில்லை, செயலில் காண்பிப்போம். நாங்கள் மக்களோடு இருப்போம். எதிர்க்கட்சியினருக்கு பதில் சொல்லிக்கொண்டு எத்தனை நான் இருக்க முடியும் . இவ்வாறு அமைச்சர் கூறினார்.