தேவைப்பட்டால் ஊரடங்கை நீட்டிக்கலாம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலையில் தினசரி 30,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், மே 24ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. இன்று மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முழு ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது, விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனத் தெரிவித்தார். வரும் 7ம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ளது.
இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் மறைந்த பாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் படத்துக்கு மரியாதை செலுத்திய எல்.முருகன், பின்னர் ஊரடங்கு தொடர்பாக பேட்டியளித்தார்.
தேவைப்பட்டால் 7ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிப்பதில் தவறில்லை என்ற எல்.முருகன், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது தடுப்பூசி குறித்து சந்தேகம் எழுப்பியவர் தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதாரண மக்களுக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் வித்தியாசம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், சசிகலா ஆடியோ வெளியானது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும், அதனை அவர்களே பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்றும் கூறினார் எல்.முருகன்.







