UTurn திமுக அரசு – இபிஎஸ் ஆவேச ட்வீட்

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 8 மணி…

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து
12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது.

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று, 12 மணி நேர வேலை சட்டமசோதா மீதான செயலாக்கத்தை நிறுத்திவைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

அதேபோல், வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம் வழங்கிட கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன. இதனை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, அதில் சில திருத்தங்களைச் செய்தது. பின்னர் சிறப்பு உரிமம் வழங்கும் முறையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த முடிவுகளைக் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், “தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து, பள்ளிகல்வித்துறையில் LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எடுக்கமுடியாத இந்த அரசினால் மக்கள் அவதிக்குள்ளாவது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது.

https://twitter.com/EPSTamilNadu/status/1650765318518886406?s=20

இந்த அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.