முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

டிடிவி தினகரன் விடுவிப்பு ; அதிமுகவில் சலசலப்பு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக,  அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரன் பெயர் சேர்க்கப்படவில்லை. இது டிடிவி தினகரனுக்கு ஒரு புறம் நிம்மதியையும்,  மறுபுறம் பாரதிய ஜனதா கட்சியுடன் சசிகலா குடும்பத்தினருக்கும் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, நெருக்கம் ஏற்படுவதற்கு வழி வகுக்கும் என்றும்  அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். டிடிவி தினகரன் பெயர் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் விடுவிக்கப்பட்டிருப்பது அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பிளவுபட்டது. கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது சசிகலா தரப்பிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சப்பணமாக ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக தற்போதைய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இதற்கிடையே, அப்போது நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி அமலாக்க பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணைக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு  ஒருமுறை டி.டி.வி.தினகரன் டெல்லி அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

 

இந்தநிலையில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவதற்காக அமலாக்க பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் டி.டி.வி.தினகரனுக்கு சம்மன் அனுப்பினர். அந்த சம்மனில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேதியில் டி.டி.வி.தினகரன் ஆஜராகவில்லை. அதற்கு உரிய காரணத்தை குறிப்பிட்டு வேறு ஒரு நாளில் ஆஜராவதாக தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே அமலாக்க பிரிவு அதிகாரிகள், டெல்லி திகார் சிறையில் இருந்த சுகேஷ் சந்திரசேகரை காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பண பரிமாற்றம் தொடர்பான பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, ஏற்கனவே கேட்டுக்கொண்ட காலஅவகாசத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் டி.டி.வி.தினகரன் டெல்லி ஜன்பத் ரோட்டில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஆஜர் ஆனார். சுகேஷ் சந்திரசேகரும் ஏற்கனவே அமலாக்க பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் இருப்பதால் இருவரிடமும் மாறிமாறி விசாரணை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை சிபிஐ நீதிமன்றத்தில், இவ்வழக்குத் தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இதில் டிடிவி தினகரன் பெயர் இடம்பெறவில்லை. இது டிடிவி தினகரனுக்கு தற்போதைக்கு நிம்மதி அளித்துள்ளது. மேலும் அந்த வழக்கில் பணம் கொடுக்க முயன்றவர்கள் யார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பணம் பெற தயாராக இருந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் யார் என்பது குறித்து எவ்வித தகவலும் இடம் பெறவில்லை எனத் தெரிகிறது.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளிடம் பேசியபோது, ’இந்த வழக்கில் சாரை ( டிடிவி தினகரனை அவர்கள் இப்படிதான் அழைக்கின்றனர்) விடுவிக்கப்பட்டிருப்பது உள்ளபடியே மகிழ்ச்சி. அதேநேரத்தில் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என சின்னம்மாதான் தீவிரமாக இருக்கிறார். ஆனால் அவருக்கும் முதலமைச்சராக வேண்டும் என்ற கனவு இல்லை. தமது கவுரவத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாக அவர் கருதுகிறார் என்றனர். மேலும், டிடிவியை பொறுத்தவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே முனைப்பு காட்டி வருகிறார் என்றனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அரசியல் பார்வையாளர்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற வேண்டும் என திட்டமிடுகிறது. அதற்கு தற்போதைய அதிமுக கட்சியுடனான கூட்டணி மட்டும் போதாது. பிரிந்து கிடக்கும் அதிமுக வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும். அந்த வகையில் டிடிவி தினகரனின் அ.ம.மு.க – வையும் பாஜக கூட்டணியில் இடம் பெற வைக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். சசிகலா தரப்பிலோ, அதிமுகவில் முக்கிய பொறுப்பை பெற்றுத் தீருவது என்ற முடிவில் மிகவும் தீர்க்கமாக உள்ளார். அதனுடைய வெளிப்பாடுதான் அவர் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்த வழக்கில் தேவைப்பட்டால் கூடுதலாக சார்ஜ் ஷீட் தாக்கல் செய்யவும் வாய்ப்புள்ளது என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லி குற்றப்பிரிவு தொடர்ந்த கிரிமினல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. எது எப்படியோ ? ஒரு வழக்கு அடுத்த தேர்தலுக்கான முனைப்பாக மாறியுள்ளது. இதில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எழில் – பார்த்திபன் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

Gayathri Venkatesan

மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: ஒருவர் கைது

Web Editor

செல்போன் பயன்படுத்திய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்

Vandhana