மோடி குடும்பப் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக, தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதையடுத்து, உண்மையே தன்னுடைய கடவுள் என்றும், அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே தன்னுடைய மதம் எனவும் மகாத்மாவை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ”அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று பேசியதாக தெரிகிறது . அதனடிப்படையில் , பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல்காந்தி ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் இழிவுபடுத்தி விட்டதாக கூறி குஜராத் மாநிலம், சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்குவதாகவும் சுரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக உடனடியாக அவருக்கு பிணை வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உண்மையே தன்னுடைய கடவுள் என்றும், அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே தன்னுடைய நடவடிகைகள் இருக்கும் எனவும் மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
https://twitter.com/RahulGandhi/status/1638793459409780737?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








