திருநங்கைகள் நடத்தும் உணவகம் துவக்கம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க திருநங்கையரால் மட்டும் நடத்தப்படும் உணவகம் ஆகும். பொது சமூகம், திருநங்கையர்கள் இணைந்த சமூகம் என்ற நோக்கத்தின் முன்முயற்சியாக இந்த…

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க திருநங்கையரால் மட்டும் நடத்தப்படும் உணவகம் ஆகும். பொது சமூகம், திருநங்கையர்கள் இணைந்த சமூகம் என்ற நோக்கத்தின் முன்முயற்சியாக இந்த உணவகம் துவங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கச் செயலாளர் தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் பின்புறம் சல்டானா சாலையில், கோவை திருநங்கைகள் உணவகம் மற்றும் கோவை மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சித் தலைவர் சியாமளா தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முருகேசன், அருள்மணி, பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சகோதரி அறக்கட்டளை சமூக செயல்பாட்டாளர் கல்கி மற்றும் திருநங்கைகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கோவை மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கச் செயலாளர் வீணாயாழினி கூறுகையில், கோவை மாவட்ட திருநங்கையர் நலச்சங்கம் 2012ஆம் ஆண்டு முதல் திருநங்கையரின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைப் பெற்றுத் தருதல், சுய உதவிக் குழுக்களை அமைத்தல் என பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, முதல்முறையாக பொள்ளாச்சியில் திருநங்கையரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில் முயற்சியில் முழுக்க முழுக்க திருநங்கையரே நடத்தும் உணவகத்தைத் துவக்கியுள்ளோம். இது பொது சமூகம், திருநங்கையர்கள் இணைந்த சமூகம் என்ற நோக்கத்தின் முன்முயற்சியாகும்.

சமையல் கலை மற்றும் பல்வேறு திறமைகள் உடைய திருநங்களைகள் பலர் கோவை மாவட்டத்தில் உள்ளனர். அவர்களது திறமைகளைக் கண்டறிந்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

உணவகம் திறக்கப்பட்ட முதல்நாளே குடும்பத்துடன் திரளானோர் உணவகத்துக்கு வந்து உணவருந்திச் சென்றனர். திருநங்கையர்களின் இந்த முயற்சிக்கு ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.