மதவெறி அரசியல் பேசுபவர்களோடு அம்பேத்கரை ஒப்பிட முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழா சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. விழாவில், மாணவர்களிடையே உரையாற்றிய தொல்.திருமாவளவன், சமூகநீதி மூலம் அதிகாரத்தை நுகர வேண்டும், அதிகாரத்தின் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அம்பேத்கர் என தெரிவித்தார்.
மதசார்பற்ற அரசியலோடுதான் அம்பேத்கரை பொருத்திப் பார்க்க முடியும் என்று தெரிவித்த திருமாவளவன், மதவெறி அரசியலை பேசுபவர்களோடு அவரை ஒப்பிட முடியாது என குறிப்பிட்டார். அடுத்த தலைமுறை மாற்றத்திற்காக புரட்சியாளர் அம்பேத்கரை போல் நாமும் படிப்போம் என மாணவர்களுக்கு திருமாவளவன் அறிவுறுத்தினார்.
அண்மைச் செய்தி: ’ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி’
சமீபத்தில், இசையமைப்பாளர் இளையராஜா ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் எனும் அமைப்பின் சார்பில் வெளியான அம்பேத்கரும் மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல்வீர்ரகளின் நடவடிக்கையும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்தார். அது தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கிய பேசுபொருளானது. அதன் காரணமாக விசிக-பாஜக இடையே பெரிய அளவில் கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது ‘மதவெறி அரசியல் பேசுபவர்களோடு அம்பேத்கரை ஒப்பிட முடியாது’ என தொல்.திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








