மணிமுத்தாறு அருவியில் 12 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால் 12 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இதனால் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்வார்கள்.

தென்மேற்கு பருவமழை காரணமாக மாஞ்சோலை, காக்காச்சி, நாளுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் கனமழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மணிமுத்தாறு அருவியில் தற்போது தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் 12 நாட்களுக்கு பின் இன்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.