தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குச்சாவடிக்கு தேவையானப் பொருட்களை அனுப்பும் பணி இன்று மாலைக்குள் முடிவடைய உள்ளது. இறுதிக் கட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து, 446 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும், 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், தபால் மூலம் வாக்களிக்க ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 537 மிக பதற்றமான வாக்குச்சாவடிகளும், 10 ஆயிரத்து 830 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில், கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பில், 235 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அமைதியாகவும், நேர்மையான முறையிலும் நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.